கவிபாரதி சிறுகதைகள்

Thursday 20 September 2012

புதிர் பூக்கள்- பாகம் I

வெயில் ஊரை வெளுத்துக் கொண்டிருந்தது. காய்கறி வாங்கிக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க திலகா வீடு வந்து சேர்ந்தாள். தொண்டை குழி வற்றிப் போய் வந்தவள், கதவை தட்டினாள்.

கவிதா.. கவிதா... கதவ திறமா..

உள்ளிருந்து சப்தமேதும் இல்லை. சில நிமிடங்கள் பொறுமையாய் இருந்த திலகாவிற்கு பயம் பிடித்தது. உள்ளிருந்து கதவு தாழிடப் பட்டிருந்தது. கவிதாவின் அலைப் பேசிக்கு தொடர்பு கொண்டாள். தற்சமையம் தொடர்பு கொள்ள முடியாது என்றது. மகளுக்கு என்னவானதோ என்று பதறிய திலகா, அக்கம் பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள்... யாருமில்லை.

அந்த தெருவில் 20 குடும்பங்கள் வாழ்தாலும், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதே பேரதிசயம். மகள் கதவை திறந்து விடுவாள் என்ற எதிர்பார்ப்போடு, மீண்டும் மீண்டும் தட்டினாள். நிமிடங்கள் ஓடிக் கொண்டிடுந்தன. நேரம் ஆக ஆக, பதட்டமும் பயமும் அதிகமானது. இனிமேலும் தாமதிக்கக் கூடாதென்று முடிவெடுத்தவள், வேகமாய் கவிதாவின் அப்பாவை அழைக்க முற்பட்டாள்.

கவிதாவின் அப்பாவிடமிருந்தும் பதில் வரவில்லை. அவர் அலுவல் காரணமாக சில சமயம் அலை பேசியை அணைத்து வைப்பது வழக்கம். இப்போது திலகா செய்வதறியாது விழித்தாள்..

கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க தொடங்கியது. தலை சுற்றுவது போல் தோன்ற, வீட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

பக்கத்து வீடுகளில் விசாரித்த போது, யாரும் பயன் படுகிற மாதிரி பதில் தரவில்லை.. அங்கிருந்த சில பேர் கதவை உடைக்க ஆரம்பித்தனர்...  நிமிடங்கள் ஆனது... அதுவரை திலகா அப்டி ஒரு நரகத்தில் இருந்ததே இல்லை...மனதுக்குள் என்னவெல்லாமோ ஓட ஆரம்பித்தது.

ஒரு வேலை கவிதா யாரையேனும் காதலித்து, ஏமாற்றப்பட்டு... மனமுடைந்து.... ச்சி..ச்சி இருக்காது... கல்லூரியில் ஏதாவது தகராறு.... வேறு ஏதாவது  செய்திருந்து.. குற்ற உணர்வால்....அய்யோ... கடவுளே அப்படியெல்லாம் ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது..

எதோ புது சக்தி வந்தவள் போல் எழுந்து கொண்டு, மீண்டும் கதவை தட்டினாள்.  இந்த முறையும் வெறுமையே அவளை அறைந்தது. வீட்டில் இருக்கும் இன்னொமொரு சாவியை எடுத்துக் கொண்டு போய்  இருக்க வேண்டும் என்று அவள் அறிவு அவளை திட்டியது..

மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு வந்தவள், 5 மணியாகியும் வாசலில் பேய் அறைந்தவள்  போல் கிடந்தாள். இப்போது கொஞ்சம் தைரியம் வந்தது இருந்தது. கவிதாவின் அப்பா  நேரமானது. காவல் நிலையம் போக தைரியம் இல்லாமலும்.. அப்படி போனால் தன மகள் மீது ஏதாவது பழி விழுந்துவிட கூடுமென்றும், உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்த தரும் முடியப் போகிறது.. சோர்வும் சோகமும் சேர்ந்து திலகாவை கொல்ல, செய்வதறியாது தவித்தாள்..

கணவன் வந்ததும் எப்படியாவது மகளை கண்டு பிடித்து, அவள் கன்னத்தில்  நான்கு அறைய வேண்டும் போல்  இருந்தது...

கவிதாவின் அப்பா வீடு வரும் போது, மணி  6 ஆகி இருந்தது.. சற்று இருட்ட தொடங்கி இருந்தது.. நெஞ்சம் படபடக்க, பைத்தியம் பிடித்தவர்கள் போல், தெருவிலும், அக்கம் பக்கத்திலும் தேடி களைத்தனர்...

இறுதியை இருந்த ஒரே  வழி.... காவல் நிலையத்தில் புகார்  கொடுப்பது... அது வரை காவல் நிலையத்தின் உட்பகுதியை சினிமாவில் மட்டும் பார்த்திருந்த திலகாவிற்கு, அந்த சூழல் இன்னும் பயத்தை கூட்டியது.


உள்ளே நுழைந்தர்வர்கள், அங்கு பணியில் இருந்த அதிகாரியிடம் கதறி அழுதனர்....

"சார்... என் பேரு ஆனந்தன்.. சிவகாமி அவன்யூல 49ஆம் வீட்ல குடி இருக்கேன்.. என் மகளை இன்னிக்கு மதியத்திலிருந்து காணோம்.." சொல்ல சொல்ல.. தொண்டை அடைத்தது....

"முதல்ல உட்காருங்க சார்.... பொறுமையா இப்போ சொன்னதெல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க... ஆக்க்ஷன் எடுக்கறேன். பதறாதீங்க உங்க பொண்ணு பத்திரமா இருப்பா"

அவர் சொன்னபடி எழுதி கொடுத்து விட்டு, வீடு திரும்பினர்.. உண்ண மனமில்லாமல், உறங்கவும் கண்கள் ஒத்துழைக்காமல்... இரவு கடந்தது!

 ஏன் தான் காலை வந்ததென்பது போல் இருந்தது... இருவருக்கும் அழுது அழுது கண்கள் வறண்டிருந்தன....

"சார் நான் ஆனந்தன் பேசறேன், ஒரு பர்சனல் வேல இருக்கு.. இன்னிக்கு ஆபீஸ் வர முடியாது லீவ் சொல்லிடுங்க ப்ளீஸ்... ரொம்ப நன்றி சார்..."

அலை பேசியை துண்டித்து முடித்தவுடன், அழுகை பொத்துக் கொண்டு வந்தது...

யாரிடமாவது சொல்லி ஓவென்று அழவேண்டும் போல் தோன்றியது.. யாரிடம் சொல்வது..

ஏற்கனவே பக்கத்துகாரர்கள் ஏகத்துக்கு பேசுகிறார்கள்... சொந்தக்காரர்களுக்கு தெரிந்தால்.... மகளின் வாழ்க்கை பாழாய்  போய்விடும்.. உண்மை நிலவரம் அறியாது, யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தனர்...


10 நாட்கள் கடந்திருந்தன... எந்த நல்ல தகவலும் இல்லை.. திலகவோ பாதி இறந்தே போய் இருந்தாள்.. மகள் உயிரோடு இருக்கிறாளா.. இல்லையா என்று கூட தெரியாத கவலையில், ஆனந்தனின் முகம் 10 வயது கூடியது போல் தெரிந்தது.. அன்று வரை அவர் அப்படி தாடி வளர்த்ததில்லை...

வீடு முழுதும் அமைதி.. சிம்மாசனமிட்டிருந்தது.... தேதி கூட கிழிக்கப் படாமல்... வாசல் தெளிக்கப் படாமல்.... வீட்டின் ஒவ்வொரு சுவரும் கவிதாவின் இல்லாமையை கத்தி கத்தி சொன்னது...

11ஆவது நாள், ஆனந்தனின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது... அதில் அனுப்புனர் முகவரி இல்லை..

அன்புள்ள அம்மா அப்பாவிற்கு, உங்கள் செல்ல மகளாய் இருந்த கவிதா எழுதுவது..

என்னை நீங்கள் இருவரும் மன்னிக்கவே மாட்டீர்கள் என்று தெரியும். இருந்தாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்கவே இக்கடிதம். எனக்கு உயிர் கொடுத்து இந்த வாழ்க்கையை கொடுத்தவர்கள் நீங்கள் இருவரும். உங்களது நிழலில் மீண்டும் இருக்க மாட்டேனா என்று தான் நானும் தவிக்கிறேன்.

நான் வீட்டை விட்டு  வெளியேறியமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் சத்தியமாய் சொல்கிறேன்... யாருடனும் ஓடிப் போகவில்லை.. எந்த தவறும் செய்யவில்லை... காரணத்தை எழுதாமைக்கு மன்னிக்கவும். நான் இன்றளவும் உங்கள் அன்பு மகளாய் தான் எதோ ஒரு மூளையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சில நாட்களாகவே வீட்டை விட்டு போக எண்ணி இருந்தேன்... சந்தர்ப்பம் அமையவில்லை...அன்று அம்மா கடை வீதிக்கு போன போது, கதவை உள்ளே தாழிட்டு விட்டு, பின் வழியாக சென்று விட்டேன். நான் செய்த இந்த மன்னிக்க முடியா குற்றத்திற்காக வருந்துகிறேன்.. என்னை தேட முயற்சிக்க வேண்டாம். ஒரு வேலை பபுகார் ஏதும் கொடுத்திருந்தால், அதை திரும்ப பெற்று கொள்ளவும்.. நீங்கள் ஏதாவது முயற்சி செய்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன்..

இப்படிக்கு,
கவிதா..

                                                                                             (தொடரும்...)

1 comment:

  1. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்........

    ReplyDelete